குறள் 11

குறள் 11:   வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று மு.வ உரை: மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத்தக்கதாகும். சாலமன் பாப்பையா உரை: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம். கலைஞர் உரை: உலகத்தை வாழ வைப்பது மழையாக அமைந்திருப்பதால் அதுவே அமிழ்தம் எனப்படுகிறது.

குறள் 12

குறள் 12:   துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை மு.வ உரை: உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும். சாலமன் பாப்பையா உரை: நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே. கலைஞர் உரை: யாருக்கு உணவுப் பொருள்களை விளைவித்துத்தர மழை பயன்படுகிறதோ, அவர்களுக்கே அந்த மழை அவர்கள் அருந்தும் உணவாகவும் ஆகி அரிய தியாகத்தைச் செய்கிறது.

குறள் 13

குறள் 13:   விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி மு.வ உரை: மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும். சாலமன் பாப்பையா உரை: உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும். கலைஞர் உரை: கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்.

குறள் 14

குறள் 14:   ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் மு.வ உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார். சாலமன் பாப்பையா உரை: மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார். கலைஞர் உரை: மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.

குறள் 15

குறள் 15:   கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை மு.வ உரை: பெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும். சாலமன் பாப்பையா உரை: பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான். கலைஞர் உரை: பெய்யாமல் விடுத்து உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக உயிர்களின் நலிந்த வாழ்வுக்கு வளம் சேர்ப்பதும் மழையே ஆகும்.

குறள் 16

குறள் 16: விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது மு.வ உரை: வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது. சாலமன் பாப்பையா உரை: மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும். கலைஞர் உரை: விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.

குறள் 17

குறள் 17:   நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் மு.வ உரை: மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும். சாலமன் பாப்பையா உரை: பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும். கலைஞர் உரை: ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும் மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் … Read more

குறள் 18

குறள் 18:   சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு மு.வ உரை: மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது. சாலமன் பாப்பையா உரை: மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது. கலைஞர் உரை: வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?.

குறள் 19

குறள் 19:   தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் மு.வ உரை: மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும். சாலமன் பாப்பையா உரை: மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது. கலைஞர் உரை: இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் … Read more

குறள் 20

குறள் 20:   நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு மு.வ உரை: எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். சாலமன் பாப்பையா உரை: எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது. கலைஞர் உரை: உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.